ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் மஹாசக்தி பீடம்

மஹா சக்தி ரூபம், மக்களின் கஷ்டங்க்களை தீர்க்கும் கலியுக தெய்வம், நமது வாராஹி தேவி.

கோவை தடாகம் ரோடு இடையர்பாளையத்தில் சாயிபாபா கோயில் வீதியில் வாசுகி மஹால் மண்டப வளாகத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் திருக்கோயிலும், உன்மத்த மஹா கால பைரவர் திருக்கோயிலும் வரம் தரும் சக்தி பீடங்களாக அமைந்துள்ளது. 

திருக்கோயில் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும். ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பஞ்சமி நாட்களில் இரவு 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், கால பைரவருக்கு அஸ்டமி நாட்களில் இரவு 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெறும்.

சிறப்பு நாட்களில் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் வாராஹியையும், கால பைரவரையும் உரிய மந்திரங்களைச் சொல்லித் தொழுவோம். வாழ்வில் நல்ல திருப்பங்களைத் தந்தருளுவாள் வாராஹி சிக்கல்களை தீர்த்தருளுவார் கால பைரவர். மங்காத செல்வம் தந்து காத்தருளுவாள் வாராஹி தேவி, வாழ்வில் நிலையான நிம்மதியை தந்தருளுவார் பைரவ மூர்த்தி.

சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம். வலிமை மிக்கவள், நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.

கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.

வாராஹி அம்மனுக்கு கோயில் அமைத்து முறைப்படி பூஜைகள் செய்து பக்தர்கள் அனைவரும் நலமும் வளமும், சகல செல்வங்களும் பெற குருவருள் சாயிபாபா கோயில் வளாகத்தில் கோயில் 2025 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி  வாராஹி தேவியும், உன்மத்த மஹா கால பைரவரும் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை/பௌர்ணமியை அடுத்த ஐந்தாவது தினத்தில் வளர் பிறை/தேய்பிறை பஞ்சமி திதி அனுஷ்டிக்கபடுகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து நம் தொல்லைகளில் இருந்து மீட்டு அருள்வாள் பால வாராஹி. 

அதேபோல், ஒவ்வொரு மாதமும் அமாவாசை/பௌர்ணமியை அடுத்த எட்டாவது தினத்தில் வளர் பிறை/தேய்பிறை அஸ்டமி திதி அனுஷ்டிக்கபடுகிறது. இந்த அஸ்டமி திதியில் காலபைரவரை வழிபட்டு வந்தால் வாழ்க்கை சிக்கலின்றி அமைதியாக நிம்மதியாக செல்லும்

ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு. நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

பஞ்சமி திதி நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறை யில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம். வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து, எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம்.

பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை, வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்திய மாக வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம். இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி. மேலும் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது, பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.

வாராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர் முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க் கிழமையன்று மாலையில் மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டு வந்தால், இழந்த பொருளை திரும்பப் பெறலாம், எல்லா அஸ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். குறைந்தபட்சம் 21 அஸ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்

நம்முடைய எதிரிகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள,தினமும் இந்த பைரவர் காயத்ரி மந்திரங்களை சொல்லி வரலாம். பைரவரை முறைப்படி பக்தி சிரத்தையுடன் வணங்கி வர தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளைவிப்பார் பைரவர்.
 
நம்முடைய எதிரிகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள,தினமும் இந்த பைரவர் காயத்ரி மந்திரங்களை சொல்லி வரலாம். பைரவரை முறைப்படி பக்தி சிரத்தையுடன் வணங்கி வர தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளைவிப்பார் பைரவர்.
 
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
ன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
 
பரமேஸ்வரனான சிவபெருமான் பிரபஞ்ச வடிவானவர். அனைவரையும் காக்கும் பொருட்டு் பல்வேறு திருவடிவங்கள் தாங்கி உருவெடுத்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். அறுபத்து நான்கு திருவடிவங்கள் கொண்டு பிரசன்னமாகி தீமையை அழித்து நன்மையைக் காத்தவர். அவற்றுள், கணபதி, முருகன், வீரபத்திரர், பைரவர், ஐயனார் ஆகியோர் சிவகுமாரர்கள் என்கின்றன புராணங்கள். சிவனின் ரூபமாகத் தோன்றியதால் அவர்களே சிவனாகவும், சிவ குமாரர்களாகவும் விளங்கி, துஷ்ட நிக்ரஹமும் பக்த பரிபாலனம் செய்கிறார்கள். ‘சிவனே பைரவர்’, ‘பைரவரே சிவன்’ என்றபோதும் இருவருக்குமான வழிபாடுகள், பூஜைமுறைகள், பலன்கள் எல்லாம் தனித்தனியானவை. இவற்றை அறிந்துகொள்ளும் வகையில் ‘பயம் போக்கும் பைரவர் வழிபாடு’ என்னும் மின்னிதழாக ஆனி மாத இறையருள் மலர்கிறது.
 
பிரம்மன் படைப்புத்தொழில் செய்வதாலும் ஐந்துதலைகளைக் கொண்டிருப்பதாலும் ‘தானே பெரியவன்’ என்னும் அகந்தை கொண்டாராம். அகந்தை கொண்டு அவர் எல்லோரையும் எள்ளிநகையாடினார். அப்போது பிரம்மனின் ஆணவத்தை அழிக்கும்படி சிவனடியார்கள் வேண்டிக்கொள்ள சிவன் தன் ரூபமான பைரவரைத் தோற்றுவித்தார். விஸ்வரூபம் கொண்ட பைரவர் தன் விரல் நகத்தினால் பிரம்மாவின் தலை ஒன்றினைக் கொய்தார். அகந்தை நீங்கி அயனும் பைரவரை வணங்கித் தன் பிழை பொறுக்குமாறு வேண்டினார்.
இருளையும் அகந்தையையும் அழிப்பவர் பைரவர் ஆதலால், இவற்றால் துன்பப்படுபவர்கள் பைரவ வழிபாடு செய்ய அவை அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறையும்.
 
சிவனும் பைரவரும் வேறுவேறல்ல.
சிவனை லிங்க ரூபமாக வழிபடுகிறோம்.
 
பைரவரையோ பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்தும், சூலாயுதம் ஏந்தி, பாசக் கயிறு கொண்டு, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தாங்கிய திருமேனியாக வழிபடுகிறோம்.
 
ஆலயங்களில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருள்வார். பைரவரோ அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கியே நின்றருள்வார்.
 
சிவபெருமானின் பிரதான வாகனம் ரிஷபம். பைரவரின் பிரதான வாகனம் நாய். ருத்ரம் என்னும் வேத பாகம் ஈசனை ‘நாய்களின் தலைவன்’ என்று புகழ்வது பைரவ ரூபத்தையே.
 
சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சிவன் மங்கள மூர்த்தியாகத் திகழ்பவர். இந்த உலகில் ஐந்தொழில்களையும் புரியும் வகையில், வக்ரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை என்னும் ஐந்து குணங்கள் கொண்ட தன் அம்சங்களை அவர் பிறப்பித்தார்.
 
பஞ்ச குணங்களில் பைரவர் வக்ர குணத்தின் அம்சமானவர். பகைவரை அழிக்கும் ருத்ரமூர்த்தியாக விளங்கும் பைரவரை வழிபட பகைமுற்றிலும் மறையும்.
 
துன்பம் ஒரு வெள்ளம் போல சூழ்ந்துகொண்டு தப்ப வழியின்றித் தவிப்பவர்கள், பற்றிக்கொள்ள உகந்த வழிபாடு பைரவர் வழிபாடு. பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் சனியின் குருவாகக் கருதப்படுபவர். குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு. பைரவரை வழிபடுவதன் மூலம் சனியினைக் குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். அசுர சக்திகளை அழிப்பதற்காகவே அவதரித்த பைரவரை வேண்டிக்கொள்ள பக்தர்களைத் தாக்கும் தீய சக்திகளையும் அவர் அழித்துக்காப்பார்.
 
சிவாலயங்களில் அனைத்து வழிபாடுகளும் காலை சூரியபகவானிடம் தொடங்கி இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறும். இரவில் கோயிலைக் காத்தருள்பவர் பைரவர் என்பதால் அவரின் திருவடிகளில் திறவுகோலை சமர்ப்பிக்கும் வழக்கமும் உண்டு.
 
ஆலயத்தைக் காக்கும் பைரவர் அடியார்களின் வீட்டையும் காப்பார். தினமும் ஆலயம் சென்று பைரவரை வணங்கி வர திருடர் பயம் நீங்கி ஆனந்தமாக வாழலாம்.
 
பைரவர், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார். எனவே, இந்தப் புண்ணிய தினம் `காலபைரவ அஷ்டமி’ என்று போற்றப்படுகிறது. அதனால், பைரவரைத் தேய்பிறை அஷ்டமி, சதுர்த்தி திதி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வணங்குவது சிறப்பு வாய்ந்தது. இவரை, சிவப்பு நிற ஆடை அணிந்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிறப் பழங்களை நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.
கோயில்களில், ராகுகாலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்துகொள்வது அபரிமிதமான நன்மையைக் கொடுக்கும். இதனால், மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகி வாழ்க்கை செழிப்படையும்.
பொதுவாகவே வீட்டில் உக்கிரமான தெய்வங்களை வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் அநேகருக்கு உள்ளது. ஆனால் தெய்வத்தின் சாந்த ரூபங்களும் ருத்ர ரூபங்களும் பக்தர்களைக் காப்பதற்காகவே உள்ளவை என்பதைத் தெரிந்துகொண்டால் இந்த சந்தேகம் எழாது. குறிப்பாக பைரவர், ‘கால சம்ஹார மூர்த்தி’யின் அம்சமாகத் திகழ்வதால் அவரை வீட்டில் வைத்து வழிபட சில பக்தர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் அந்த பயம் தேவையே இல்லை. பைரவர் பகைவர்களுக்கும் தீமைக்குமே சம்ஹார மூர்த்தியாகக் காட்சி தருபவர். பக்தர்களுக்கோ அவர் கருணாமூர்த்தி. பக்தர்களின் இந்தக் கவலையைப் போக்கவே அவர் அஷ்ட பைரவராக அருள் செய்கிறார். ஒவ்வொரு பைரவ வடிவமும் தம்முள் மாறுபட்டிருந்தாலும் பக்தர்களுக்கு அருள் செய்வதில் மாறாத தன்மை உடையவை.
 
வீட்டில் பைரவரின் படம் அல்லது யந்திரத்தை வைத்துப் பூஜை செய்யலாம். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேய்பிறை அஷ்டமி தினத்தில், ராகுகாலங்களில் இந்த பூஜையைச் செய்வது விசேஷம். தினமும் குளித்துவிட்டு, தீபமேற்றி பைரவர் படத்திற்கோ அல்லது யந்திரத்திற்கோ சந்தனம் குங்குமம் இட்டு மலர்கள் சாற்றி உகந்த நைவேத்தியங்களான கேசரி, சர்க்கரைப் பொங்கல் போன்றவை செய்து வழிபடுவது நிறைந்த பலன்களைத் தரும்.
 
1. அசிதாங்க பைரவர்:
பைரவ வடிவங்களில் முதன்மையானவர் அசிதாங்க பைரவர். காசியில் விருத்தகாலர் திருக்கோயிலில் அருள்பாலிப்பவர். இவரது வாகனம் அன்னம். இவரின் தேவியாக சப்தமாதர்களுள் ஒருவரான பிராம்ஹி திகழ்கிறார். இந்த ஆலயம் குருஸ்தலமாக விளங்குகிறது.
2. ருரு பைவர்:
ரிஷப வாகனத்தைக் கொண்டு அன்னை மகேஸ்வரியோடு இறைவன் அருள்புரியும் தோற்றமே ருரு பைரவர். சுக்கிரனின் அதிபதியாக, காசி காமாட்சிக் கோயிலில் இந்த வடிவத்தில் பைரவர்காட்சி கொடுக்கிறார்.
3. சண்ட பைரவர்:
காசி மாநகரில் துர்கை அம்மன் கோயிலில் காணப்படும் இந்த பைரவர் மயிலை வாகனமாகவும், அன்னை கௌமாரியைத் தன் துணையாகவும் கொண்டு காட்சி தருகிறார். சிவாம்சமும் சுப்பிரமணிய அம்சமும் கலந்து காட்சிகொடுக்கும் இவர் நவகிரகங்களுள் செவ்வாயின் அதிபதியாகத் திகழ்கிறார்.
4. குரோதனர்:
கருடனை வாகனமாகக் கொண்டு அன்னை வைஷ்ணவியோடு அருள்புரிபவர் குரோதன பைரவர். கரிய நிறம்கொண்ட இவரை வணங்குவதன் மூலம் சனி பகவானின் கருணையைப் பெறமுடியும். காசியில் உள்ள காமாட்சிக் கோயிலில் குரோதன பைரவர் அருள்புரிகிறார்.
5. உன்மத்த பைரவர்
காசி மாநகரில் பீம சண்டி ஆலயத்தில் அருள்பாலிக்கும் இந்த பைரவர் வாராஹி தேவியைத் தன் சக்திவடிவாகக் கொண்டவர். குதிரை வாகனத்தைக் கொண்டு சங்கு சக்கரம் ஏந்திக் காட்சி தரும் உன்மத்த பைரவரை வணங்க புத பகவானின் அருள் கிட்டும்.
6. கபால பைரவர்
யானை வாகனனாக அன்னை மஹேந்திரி சமேதராகக் காட்சி கொடுப்பவர் கபால பைரவர். காசி மாநகரில் லாட் பசார் ஆலயத்தில் அருள்புரியும் இவரை வணங்க நவகிரகங்களுள் ஒன்றான சந்திரனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்
7. பீஷ்ண பைரவர்
பீஷ்ண பைரவர் காசி மாநகரில் பூத பைரவ ஆலயத்தில் தரிசனம் கொடுக்கிறார். சிங்க வாகனம் கொண்டு அன்னை சாமுண்டியைத் தன் சக்தி வடிவமாகக் கொண்டவர் இவர். பீஷ்ண பைரவரை வணங்க ஞானக் காரகனான கேது பகவானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்
8. சம்ஹார பைரவர்
நாயை வாகனமாகக் கொண்டு அருள்புரிபவர் சம்ஹார பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிப்பவர். ராகு பகவானால் உண்டாகும் தோஷங்கள் நீங்க இவரை வணங்குவது மிகவும் சிறப்புடையதாகும்.
 
திருமணம் யோகம் கைகூட…
 
வெள்ளிக்கிழமை, ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.
 
குழந்தைபாக்கியம் பெற…
 
தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 
இழந்த பொருள் – சொத்துகளைத் திரும்பப் பெற…
 
பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.
 
வறுமை நீங்க…
 
வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் வறுமை அகலும்.
 
நோய்கள் தீர, யம பயம் நீங்க…
 
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து , எலுமிச்சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நோய்கள் மறையும். யம பயம் நீங்கும்.
 
சனி தோஷம் நீங்க…
 
சனிக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கிறார்கள். இவர், ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் இடது கையில் கபாலத்திற்கு மாற்றாகக் கையில் அட்சய பாத்திரம் ஏந்தியருள்கிறார். இவரை வேண்டிக்கொள்ள செல்வ வளம் கிட்டும் என்பது நம்பிக்கை.
 
தொழிலில் இறங்குமுகம் மறைய, வாராக்கடன் மூலம் ஏற்படும் துன்பம் விலக, பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு நிச்சயமாய் உதவிடும். மேலும், எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுவது சிறப்பு சேர்க்கும். பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
 
காரைக்குடி அருகில் உள்ள இலுப்பைக்குடியில் உள்ள தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு பைரவரின் வாகனமாக இரண்டு நாய்கள் உள்ளன. இங்கிருக்கும் தீர்த்தத்திற்கு பைரவத் தீர்த்தம் என்று பெயர்.
 
திருவண்ணாமலையில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில், சுமார் 7 அடி உயரத்துடன், எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார் பைரவமூர்த்தி.
சிருங்கேரி திருத்தலத்தில் மூன்று கால்களுடன் திகழும் பைரவ மூர்த்தியைத் தரிசிக்கலாம்.
 
காரைக்குடியைச் சுற்றியுள்ள எட்டு ஊர்களில் (வைரவன்பட்டி, இலுப்பைக்குடி, மாத்தூர், சூரக்குடி, கோட்டையூர், இளையாற்றங்குடி, நேமம், இரணியூர்) உள்ள சிவ ஆலயங்களில் பைரவருக்குத் தனிப் பிராகாரமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களுக்கு பைரவரே குலதெய்வமாகத் திகழ்கிறார்.
காரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார் பைரவர்.
 
சென்னை பெசன்ட்நகரில் இருக்கும் அறுபடை முருகன் கோயிலிலும் யோக பைரவருக்கு தனிச் சந்நிதி உண்டு.
 
கும்பகோணம் அருகில் திருவிசலூர் எனும் தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில், ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் அருள்பாலிக்கும் பைரவர் 8 கரங்களுடன் காட்சி தருகிறார்.
 
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில், ஆறு கரங்களுடன் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியபடி திகழும் பைரவ மூர்த்தி, சாந்தம் தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார்.
 
சங்கரன்கோயிலில், கையில் சர்ப்பம் ஒன்றை செங்குத்தாக பிடித்தபடி காட்சி தரும் சர்ப்ப பைரவரைத் தரிசிக்கலாம்.
 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐம்பொன்னாலான பைரவர் உற்சவர் விக்கிரகத்தைத் தரிசிக்கலாம்.
 
திருவொற்றியூர் – தியாகராஜ சுவாமி ஆலயத்தில், பைரவர் சிற்றாலயமும், அருகில் பைரவ தீர்த்தமும் உள்ளன.
 
காஞ்சிபுரத்தின் தென்மேற்கில், `அழிபடை தாங்கி’ என்ற இடத்தில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது.
 
திருக்கழுக்குன்றத்துக்கு அருகில், செம்பாக்கம் மலை மீது பைரவர் ஆலயம் உள்ளது.
 
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதிக்கு அருகிலேயே கால பைரவர் சந்நிதி கொண்டுள்ளார்.
 
காளஹஸ்தியில் உள்ள இரட்டை பைரவர் (ஒருவர் பைரவர், மற்றவர் பாதாள பைரவர்) சந்நிதி பிரசித்திப் பெற்றது.
 
பழநி சாது ஸ்வாமிகள் மடத்தில், சுமார் 8 அடி உயரத்தில் 10 திருக் கரங்களுடன் அருள்பாலிக்கும் விஜயபைரவரை, தென்னகத்திலேயே மிகப் பெரிய பைரவர் என்கிறார்கள்.
 
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்திலுள்ள சிறு குன்றில் பைரவரின் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் எட்டு சிவ லிங்கங்களை அஷ்ட பைரவர்கள் வழிபட்டதாகக் கூறுவர். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அஷ்ட பைரவ லிங்கங்களுக்கான ஆலயங்கள் இவை.
 
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள க்ஷேத்ர பாலபுரத்தில் காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பைரவ மூர்த்தியை இந்திரன், நவகிரக நாயகர்கள் பூஜித்து வழிபட்டு வரம்பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.
பயம் போக்கும் கால பைரவர்
 
பைரவரின் திருவடிவங்களுள், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரைப் போன்றே காலபைரவர் மூர்த்த வழிபாடும் மிகவும் சிறப்பானது. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களைச் சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர்.
 
கால பைரவர் வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடாகும். ராகு, கேதுவை முப்புரி நூலாக அணிந்திருக்கும் காலபைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
 
தேய்பிறை, அஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் கிடைக்கும்.
 
ஆதி சங்கரர் அருளிச் செய்த துதிகளுள் கால பைரவாஷ்டகமும் ஒன்று. அஷ்டகம் என்றால் எட்டு என்று பொருள். எட்டு பாடல்களில் கால பைரவரின் தோற்றத்தையும் அவரின் சிறப்பினையும் விளக்கி, அவரை வழிபடுவதால் உண்டாகும் பலன்களையும் சொல்வதாக எட்டு பாடல்களும் அமைந்துள்ளன.
 
கால பைரவாஷ்டக ஸ்லோகத்தைக் கேட்க…
பயம் போக்கும் பைரவர் வழிபாடு
ஒன்பதாவதாக இருக்கும் பாடல் கால பைரவாஷ்டகத்தைப் பாராயணம் செய்வதால் உண்டாகும் மகிமையை விளக்குகிறது. அதன் பொருள்,‘அழகான இந்த கால பைரவாஷ்டகத்தைப் படிப்பவர், ஞானம், முக்தி இவைகளுடன் பற்பல புண்ணியங்களையும் அடைவர். துக்கம், மோகம், லோபம், ஏழ்மை, கோபம் தாபம் நீங்கி கால பைரவர் சந்நிதியை நிச்சயம் அடைவர் என்று அந்த ஸ்துதியின் மகிமையை விளக்குகிறது. தினமும் மாலையில் விளக்கேற்றி இந்த ஸ்துதியைப் பாடிவர சகல நன்மைகளும் கிட்டும்.
பயம் போக்கும் பைரவர் வழிபாடு
அஷ்ட பைரவர் துதி
துண்டமதி புனைந்து அகல்விண்தோய்
சிகரத்தினில் அமர்ந்த
அண்டர் பிரான் கணத்தலைமை
அசிதாங்கன் கபாலி
சண்டன் ருரு குரோதனன்
சங்காரன் பூஷணன் சீர்
கண்டருளும் உன்மத்தன்
கழற்கமலம் பரவுவாம்
கருத்து: நிமிர்ந்து உயர்ந்திருக்கும் உமாமகேஸ்வரர் ஆலய விமானத்தின் சிகரத்தில் அமர்ந்திருப்பவரும், பிறைச்சந்திரனை அணிந்தவரும், சிவ கணங்களுக்கெல்லாம் தலைமை வகிப்பவரும்… அசிதாங்கன், கபாலி, சண்டன், ருரு, குரோதனர், சங்காரர், பூஷணன், உன்மத்தன் ஆகிய எட்டு வடிவங்களைத் தாங்கி வந்து அன்பர்களுக்கு அருள்புரிபவரும் ஆகிய வடுக மூர்த்தியின் கழல்களைப் போற்றிப் பணிகிறேன்.

ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாட்டு பாடல்கள், மந்திரங்கள்