பால வாராஹியின் மகிமைகள் -4
ஸ்ரீ பால வாராஹி தாய் இருக்குமிடத்தில் கெட்டது, துர்சம்பவங்கள் எதுவும் நடக்கவிடமாட்டாள் என்பது இயற்கையாலும் மாற்ற முடியாத பிரபஞ்ச விதி. இதை மெய்பிக்கும் சம்பவம் 26-02-2024 அன்று வாராகி கோயிலுக்கு அருகே நடந்தது. பால வாராஹி கோயில் கூட்டு பிரார்தனை மண்டபத்திற்கு 50 அடி தூரத்தில் உள்ளது. அன்றைய தினம் காலையில் என் பேரன் யஜுர் தேவ்வுக்கு காலையில் எங்கள் குலதெய்வம் கோவை ஈச்சனாரியிலுள்ள வீரமார்த்ரே அம்மன் கோயிலுக்கு சென்று முடி காணிக்கை செலுத்திவிட்டு மாலையில் காதணி விழா குருவருள் சாயிபாபா கோயில் கூட்டு பிரார்த்தனை மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்று கொண்டிருந்தது. உற்றார் உறவினர்கள் குடும்பத்தோடு வந்து குழந்தைக்கு ஆசி கூறி சென்றது மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.
இப்படி எல்லா நிகழ்வுகளும் சுமுகமாக சென்று கொண்டிருக்கையில் திடீரென ஒரு அசம்பாவிதம் இரவு 9.00 மணிக்கு நிகழ்ந்துவிட்டது. விழாவிற்கு சிதம்பரத்திலிருந்து வந்திருந்த குழந்தையின் அப்பா பாலாஜியின் கல்லூரிகால நண்பர் திரு. ஜாக்கி குழந்தைக்கு ஒரு தங்க்க பிரேஸ்லெட் போட்டார். அது குழந்தையின் கையிலேயே இருந்தது. சுமார் இரவு 9:30 மணி இருக்கும், விழாவிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் சென்று விட்டனர். எங்கள் குடும்ப நபர்கள் மட்டும் இருந்தனர். குழந்தை போட்டிருக்கும் நகைகளை கழற்றி வைக்கலாம் என்று குழந்தையின் நகைகளை குழந்தையின் தாயார் குழந்தையிடம் இருந்த நகைகளை கழற்றியபோது குழந்தையின் கையிலிருந்த பிரேஸ்லெட் காணவில்லை.
குழந்தையின் கையில் கட்டியிருந்த தங்க பிரேஸ்லெட் எப்படி காணாமல் போனது என்ற விசாரனை ஆரம்பமானது. இரவு 9.30 மணி என்பதால் 90 சதம் விருந்தினர்கள் சென்று விட்டனர். குழந்தை யஜ்ஜுரும், சாயி அவ்யூத்தும் விளையாட மண்டபத்திற்கு வெளியே சென்று விட்டனர்.
அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஆட்டோ கிச்சன் வாசலருகில் நின்று கொண்டிருந்தது. சமையல் பணியாட்களும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர், பேசிக் கொண்டிருந்தனர்.
குழந்தைகள் விளையாடிவிட்டு மண்டபத்திற்குள் வந்தார்கள். அப்போது யஜ்ஜுவின் தாயார் குழந்தையின் முழுக்கை கோட்டை கழற்றியதும் அவன் கையில் இருந்த பிரேஸ்லெட் தவறி இருந்தது தெரிய வந்தது.
மண்டபம் ஹால் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. சரி வெளியே தேடுவோம் என்று ஆளுக்கு ஒரு பக்கம் தேடினார்கள். ஆனாலும் பலனில்லை. சரி சாயி அவ்யுத்தை விசாரிக்கலாம் என்று அவனிடம் கேட்டபோது, யஜ்ஜுரை ஒரு சமையல் உதவியாளர் தூக்கிக் கொண்டு ஆட்டோவிற்குள் சென்றார் என்றான். அது உண்மையா என்பதை கண்டறிய CCTV கேமரா காட்சிகளை பின்னூட்டம் செய்து பார்த்ததில் குழந்தை கூறியது உண்மை என் தெரிய வந்தது. குழந்தையை தூக்கியவனை விசாரிக்கலாம் என்றால் சமையல் ஆட்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். சமையல் ஒப்பந்த உரிமையாளரிடம் விஷயத்தைக் கூறி விசாரிக்கக் கூறினோம். அடுத்த நாள் காலைக்குள் தகவல் கூறுவதாக தெரிவித்தார்.
ஏன் இந்த அசம்பாவிதம், எப்படி தாயே உன் அருகாமையில் இந்த துர்சம்பவம் நிகழும் என்று வாராகித் தாயை கேட்டபடியே மனதில் நினைத்துக் கொண்டிருந்தோம்.
அம்மா, உன்னருகில் இருக்கும் எல்லோரும் நல்லவர்களே, நல்லவர்கள் மட்டுமே உன்னருகில் வரமுடியும், யார் மீதும் பழி வரக்கூடாது, கண்களால் பார்க்காமல் யார்மீதும் பழி போடக்கூடாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு வழிகாட்டம்மா என்று எங்கள் மனம் அழுத நேரத்தில், அம்மா அந்த பிரேஸ்லெட் விழுந்த இடத்தை என் மகள் பூர்ணிமாவிற்கு காட்டியருளினார். ஏதோ சாக்லெட் மிட்டாய் காகிதம் போல தெரிந்த பொருளை கைகழுவும் இடத்திற்கு கீழ் எடுத்தாள். அனால் அது தொலைந்து போன தங்க பிரேஸ்லெட். இந்த லீலையை அனுபவித்த எங்கள் எல்லோருக்கும் அப்போது தான் நிம்மதி பெரு மூச்சு வந்தது.
ஓம் சகலமறிவாய் போற்றி என்ற மந்திரத்திற்கேற்ப நம் பால வாராஹி சகலமறிந்தவள், தக்க சமயத்தில் நமக்கு உதவும் வெற்றி நாயகி நம் வாராகித் தாய்.
அன்னை வாராகியின் வாகனம் குதிரை, அந்த குதிரையால் ஏற்பட இருந்த விபத்தை எப்படி தடுத்து வாராஹி அம்மா காப்பாற்றினார் என்பதை அடுத்த மகிமையில் காண்போம்.
பால வாராஹியின் மகிமைகள் -3
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அன்னை வாராஹி. அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது. பௌர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும். பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம்.
27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை நிச்சயம் வழிபட வேண்டும். அதே போல் 12 ராசிகளில் மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட கஷ்டங்கள் என்பது அவர்களை அண்டாது. மேலும், சனி ஆதிக்கம் உள்ளவர்கள், சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபட வேண்டும்.
ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசையால் தொல்லை அனுபவிப்பவர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனை வழிபடலாம். இந்த நாட்களில் வாராஹியை தீபமேற்றி வழிபட்டால், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து மீளலாம். இது தவிர வாராஹி அம்மனை வழிபட ஏற்ற நாளான பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிபட சிறப்பான பலன் கிடைக்கும். பஞ்சமி திதியன்று வாராஹி துதிகளை பாடி, மனமுருக அழைத்து வேண்டினால் வாராஹி அம்மன் வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.
கடந்த அத்தியாயத்தில் வாராஹி அம்மன் லதா அவர்களுக்கு கொடுத்த பரிசு என்ன என்ற புதிர் இன்னும் விடுவிக்கப்படவில்லை அல்லவா?
சாயி பக்தியுடன் வாராஹியின் வரமும் சேர்ந்து கொண்டதால் பல மாதங்களாக கை கூடாமல் இருந்த பிரார்த்தனை வெற்றிகரமாக நிறைவேறி விட்டது, அதை பிரம்ம முகூர்த்த வேளையில் பால வாராஹியே தன் கைகளால் கொடுத்தது எவ்வளவு பெரிய வரம்.
லதா அவர்களுடைய மகள் மோனிகாவிற்கு உயர் ஆராய்ச்சி (Post Doctoral Fellow) படிப்பு படிக்க அனுமதி கிடைத்து விட்டது, அதனால் மனைவியின் விசாவால் கணவரும் அமெரிக்காவில் தங்கிக் கொள்ளலாம். ஒருவழியாக தங்கும் பிச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த கோரிக்கை அவருடைய மருமகனுக்கு அவர் B Arch படித்து, M.S. (Town Planning) முடித்துள்ளார். அவர் படிப்பிற்க்கேற்ற நல்ல அரசாங்க வேலை கிடைபதற்கேற்ற சூழல் உருவாகி வந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் கைகூட வேண்டும் என்பதற்காக கடந்த தை மாத வளர்பிறை பஞ்சமியன்று, ஒரு வாழை இலையில் பச்சரிசி மீது தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை வைத்துள்ளார். ஐந்து பஞ்சமிகளில் தொடர்ந்து இந்த பிரார்த்தைனை செய்துவந்தால் அவருடைய பிரார்த்தனைகளையும், பிரச்சனைகளையும் நிச்சயம் பால வாராஹி நிறைவேற்றி தருவார் என்பது அவருடைய நம்பிக்கை மட்டுமல்ல, இவ்வுலகில் வாராகியை நம்பி வணங்கி வரும் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை. பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்னை வாராகியின் வாகனம் குதிரை, அந்த குதிரையால் ஏற்பட இருந்த விபத்தை எப்படி தடுத்து வாராஹி அம்மா காப்பாற்றினார் என்பதை அடுத்த மகிமையில் காண்போம்.
பால வாராஹியின் மகிமைகள் -2
வாராஹித் தாய் மீது பாசம் கொண்ட தாய்மார்களுக்கு அளவே இல்லை, காரணம் வாராஹித் தாயால் பல்வேறு சோதனையான காலகட்டங்களில் வாராஹித்தாயின் அருள் கிடைத்து நிவாரனம் பெற்றவர்கள் ஏராளம். அவர்களில் பலர் அதற்கு கைமாறு செய்ய தாயாருக்கு எந்த வழியிலாவது சேவை செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்த காத்திருகிறார்கள். அந்த வரிசையில் இருக்கும் ஒரு பக்தையின் வாராஹி அனுபவம் தான் இப்போது பார்க்கப் போவது.
நமது வாராஹித் தாய் உக்கிர தேவதை அல்ல, முகத்தில் தெய்வீக சாந்தம் தவழும் குழந்தை முகம் கொண்ட பால வாராஹி. குழந்தை உள்ளம் கொண்ட தாய் அவள். குன்னூரைச் சேர்ந்த பக்தை லதா அவர்கள், 15-02-2024 அன்று வர இருக்கும் வளர்பிறை பஞ்சமியில் தாய் அழகாக, தூய்மையாக, பளபளப்பாக இருக்க வேண்டும் என்று, பஞ்சமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அம்மாவை சுத்தம் செய்ய தண்ணீர் பைப்பு உள்ள இடத்தில் எடுத்துச் சென்று தேய்த்து கழுவ முயற்சி செய்துள்ளார்கள், ஆனால் அழுக்கு போகவில்லை என்பதால் அழுத்தி தேய்த்துள்ளார்கள். அப்போது அம்மா உங்களுக்கு வலிக்குமே, எங்களுக்கு கஷ்டமாக உள்ளது தாயே நாங்கள் என்ன செய்வது, ஒரு வழிகாட்டுங்கள் என்று வேண்டியுள்ளார்கள். மனமிறங்கிய தாயும் வேறு ஒரு வழியை காட்டியுள்ளார். அருகில் இருந்த கவிதா சந்தானம் என்ற பக்தை லதா அவர்களிடம், அக்கா இதை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள் என்று ஒரு பிரஸ்ஸை (Brush) கொடுத்துள்ளார். அந்த கருவி மூலம் சுத்தம் செய்ததால் சிலையின் குழிபகுதிகளில் இருந்த அழுக்கெல்லாம் மிக விரைவில் வெளியேறி சிலை பளிச் என்று ஆகிவிட்டது. இருந்தாலும் பாலவாராஹியை கோயிலில் இருந்து வெளியே எடுத்துச் சென்றது தவறோ என்று மனம் தடுமாறிக் கொண்டிருந்தார். சிலையை பீடத்தில் வைத்து அலங்காரம் செய்து, பூஜை செய்யும் போது ‘அம்மா நான் செய்தது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் தாயே என்று மனமுருகி வேண்டிக்கொண்டார்.
மன்னிப்பு கேட்ட பக்தையை விட்டு விடுவாரா கருணையின் வடிவமான வாராகித்தாய். அன்றிரவே அவருக்கு அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கனவில் குழந்தை வடிவில் காட்சி தந்து, ஓடிப்போய் சிலை சுத்தம் செய்த இடத்தில் நின்று கொண்டார். இதிலிருந்து அம்மா என்ன கூறுகிறார்? நான் கோயிலில் மட்டும் இல்லை, கோயிலுக்கு வெளியிலும் இருக்கிறேன், எங்கிருந்து சேவை செய்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வேன் என்பதாகும்.
கனவில் வந்த பாலவாராகி தனக்கு சேவை செய்த பக்தை லதாவிற்கு ஏதோ ஒரு பொருளை பரிசளிக்கிறார், அதை அவர் பயபக்தியுடன் பெற்றுக்கொள்கிறார். அது எந்த பொருள் என்று அம்மாவின் முன் பார்க்க மனம் வரவில்லை. காலையில் எழுந்ததும் கனவு அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் துள்ளியமாக நினைவிற்கு வருகிறது, ஆனால் எந்த பொருள் என்பது தெரியவில்லை. சாதாரன கனவென்றால் முழு கனவும் நினைவில் நிற்காது. ஆனால் இது பால வாரகியின் அருள் என்பதால் கண்முன் நடந்த காட்சிகளாக , சாட்சிகளாக நிலைபெற்று நின்றது.
நமது அடுத்த கட்டுரையில் அம்மா கொடுத்த பொருள் என்ன? அதனால் தன் வாழ்வில் நடந்த மாற்றம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்
பால வாராஹியின் மகிமைகள் -1
30-01-2024 செவ்வாய் கிழமை தேய்பிறை பஞ்சமி நாளில் ஹோம கலச பூஜையுடன் வாராஹி கோயில் ஆரம்பித்ததில் இருந்து நமது வாராஹி கோயிலுக்கு ஒரு பெயர் வேண்டுமென்ற எண்ணம் இருந்தது, ஒரு பக்தை சத்தியமாக நிச்சயமாக அருள்தரும் தெய்வம் இந்த வாராஹித்தாய், எனவே சத்திய வாராஹி என்ற பெயர் பொறுத்தமாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார், ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால் அந்த பெயர் சூடமுடியாமல் போய்விட்டது. சில நாட்களுக்கு முன்பு விழுபுரத்திலுள்ள அஸ்டவாராகி கோயிலுக்கு சென்றிருந்தேன், பரம சக்திவாய்ந்த அந்த தெய்வத்தின் பெயர் அத்தி வாராஹி. அந்த பெயர் காரணத்தை விசாரித்தபோது, அந்த வாராஹி அத்திமரத்தால் செய்யப்பட்ட சிலை, அதனால் அத்தி வாராஹி என்றபெயர் பெற்றுவிட்டது. அத்தி மரத்தால் செய்யப்பட்ட சிலை என்பதால் காரணத்தோடு சூட்டப்பட்ட பெயர். அதுபோல் நமது வாராஹிக்கும் ஒரு காரணத்தோடு பெயர் சூட்ட வேண்டும் என்று காத்திருந்தோம்.
வரம் வேண்டி காத்திருக்கும் பக்தர்களை வாராஹித்தாய் எப்போதும் காக்க வைக்க மாட்டார் என்பது உண்மை. 15-02-2024 வியாழக்கிழமை வழக்கம் போல குருவருள் பாபா கோயில் பக்தர்களால் நிறைந்திருந்தது. குருவருள் பாபாவின் லீலைகளை தொகுத்து ‘குருவருள் மகிமைகள்’ என்ற புத்தகத்தை எழுதிய திருமதி புவனா பிரகாஷ் அவர்களுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாக நீண்ட நாட்களாக வாராஹி தேவியின் தரிசனத்தை பெற முடியாமல் போய்விட்டது. வியாழக்கிழமையன்று பாபா கோயிலுக்கு வந்தவர் வாராகி கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று விருப்பப்பட்டார்.
அன்றிரவு மாலை 7.30 மணியளவில் பாபா கோயிலுக்கு சென்றார், வாராஹி தேவியை பார்த்து மெய்மறந்து வணங்கிக் கொண்டிருக்கும்போது, ஜல் ஜல்லென்ற குழந்தையின் கொலுசு சத்தம் கேட்கிறது, அவருக்கு அருகில் அழகிய சிறுகுழந்தை நின்றுகொண்டிருக்கிறது, கண்களை திறந்து பார்க்கும்போது பாலவாராஹியாய் அமைதியான சாந்தமான குழந்தை வடிவில் பால வாராஹியாய் அருள் வழங்கிக் கொண்டிருந்தார். மெய்சிலிர்த்து தேவியின் அருள் பெற்று ஆனந்தத்துடன் பாபா கோயிலுக்கு வந்து என்னிடம் வாராஹி தேவியின் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நமது வாராஹி தெய்வத்திற்கு எந்த பெயர் வைக்கலாம் என்றிருந்த எங்களுக்கு நான் தான் பால வாராஹி என்று சகல சக்தி வாய்ந்த தாயே எங்களுக்கு கூறியது போலிருந்ததால் இனிமேல் ஸ்ரீ பால வாராஹி என்றே அன்புடன் குழந்தை பாசத்துடன் அழைப்போம்.